உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பெருந்தொற்று இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. அதன் பரவலைத் தடுக்க, தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் இரண்டாம்கட்டப் பரவல் நிலையை அடைந்திருக்கும் கரோனாவைத் தடுக்க, ஜூன் 30ஆம் தேதி வரை முழுமையான முடக்கத்தை நீட்டிப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயத்திற்குப் புத்துயிர் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு உணவு உற்பத்திக்கு அடிப்படையான விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளுக்கு விலக்களித்துள்ளது. இருப்பினும், உற்பத்தி செய்த விளைப்பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்வதிலும், கொள்முதல் செய்வதிலும் ஏற்பட்டுள்ள சிக்கல் விவசாயிகளைப் பெரும் கவலையடையச் செய்துள்ளது.
குறிப்பாக, வறட்சியான மாவட்டமான பெரம்பலூரை அடுத்துள்ள வடக்கு மாதவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம், சிறு தானிய வகைகள், பூசணிக்காய்கள் உள்ளிட்ட பல பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் அறுவடை செய்யப்படும் பூசணிக்காய்களின் விற்பனையை நம்பி இங்கு நூற்றுக்கணக்கான விவசாயிகளளும், விவசாயக் கூலித் தொழிலாளர்களும் உள்ளனர்.
ஆனால், தற்போது சென்னை கோயம்பேடு சந்தை, மதுரை சந்தை போன்ற முக்கியமான சந்தைகள் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ளதாலும், போக்குவரத்து வசதியில்லாததாலும், விற்பனை முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் அறுவடை செய்யப்படும் பூசணிக்காய்கள் தேக்கமடைந்துள்ளன. மறுபுறம், வெட்டப்படாமல் செடியிலேயே இருப்பதால் அரைகுறையாய் பழுத்து, அழுகும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் விற்பனைக்கும் பயனற்றதாகியுள்ளது.