பெரம்பலூர் மாவட்டம் செல்லியம்பாளையத்தைச் சேர்ந்த முருகேசன் தனது விவசாய கிணற்றில் ஊற்று உருவாக்க வெடி வைத்துள்ளார். இந்நிலையில், ஊற்று வருகிறதா என பாரக்கச் சென்ற ராதாகிருஷ்ணன் என்ற இளைஞர் கயிறு மூலம் கிணற்றில் இறங்கினார்.
உள்ளே சென்ற ராதாகிருஷ்ணன் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனைத்தொடர்ந்து பாஸ்கர் என்ற இளைஞரும் கிணற்றில் இறங்கி பார்த்தார் அவரும் வெளியே வரவில்லை.
இதனையடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மீட்பு குழுவினர் மூன்று பேர் கிணற்றுக்குள் இறங்கி மயங்கிய நிலையில் இருந்த இருவரை மீட்க சென்றதில் ஒருவர் மீட்கப்பட்டார். ஆனால், சென்ற தீயணைப்புத் துறையைச் சேர்ந்த ராஜ்குமார், இளைஞர் பாஸ்கர் என்பவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
கிணற்றின் உரிமையாளர் முருகேசன்(47) அரசின் அனுமதி பெறாமல், எந்தவித உரிமையின்றி, உரிமம் பெறாத லட்சுமணன் என்பவரை வைத்து வெடி மருந்தை வெடிக்கச் செய்துள்ளார். வெடி வைக்கப்பட்ட துளையிலிருந்து வெளியான விஷவாயு காரணமாக தீயணைப்பு வீரர் ராஜ்குமார், இளைஞரும் உயிரிழந்தனர் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, கிணற்றின் உரிமையாளர் முருகேசன், வெடி வைத்த லட்சுமணன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், உரிமம் இல்லாத லட்சுமணனுக்கு வெடிமருந்து வழங்கிய தனியார் வெடிமருந்து குடோன் உரிமையாளர் அசோகன் என்பவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:ராணுவ வீரரின் மனைவி, தாய் கொலை; நகைகள் கொள்ளை!