பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் மலையப்ப நகர் பகுதியில் நரிக்குறவ குடும்பங்களும், கழைக்கூத்தாடி குடும்பங்களும் வசித்து வருகின்றன. இந்த கிரமாத்தில் உள்ள மாணவ மாணவிகள் படிப்பதற்காக ராமலிங்கம் கல்வி அறக்கட்டளை சார்பில், 1996 ஆம் ஆண்டு மத்திய அரசின் நிதி உதவியோடு பள்ளி தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பின் தலைவர் சுப்பிரமணியன் என்பவரின் தலைமையின் கீழ் இந்த பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. இங்கு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர், கழைக்கூத்தாடி, மட்டுமின்றி சேலம் ஆத்தூர் இறையூர் பகுதியில் உள்ள நரிக்குறவ குடும்பங்களின் குழந்தைகளும் படித்து வருகின்றனர். இதனிடையே ஒரு சிறிய கட்டடத்தில் இயங்கி வந்த இந்த பள்ளி, ஒரு தனியார் அமைப்பு மூலம் தத்தெடுக்கப்பட்டு புதிய கட்டடங்கள் அமைக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இங்குள்ள மாணவர்கள் 9 ,12ஆம் வகுப்பு படிப்பதற்கு ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள காரை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலைவுள்ளது. மேலும் அந்த மேல்நிலைப்பள்ளிக்கு செல்வதற்கு அரசு சார்பில் வந்த பேருந்தும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் ஐந்து கிலோ மீட்டார் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை எற்றப்பட்டுள்ளது.
எங்களுக்கு மேல்நிலைப்பள்ளி அமைத்து தர வேண்டும் - நரிக்குறவ இன மக்கள் இதைக் கருத்தில் கொண்டு மலையப்ப நகர் மாணவர்கள் பயன் பெறும் வகையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மேல்நிலைப் பள்ளி தொடங்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நரிக்குறவ இன மக்கள், எம்பிசி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதால், கல்வியில் சிறந்து விளங்கினாலும் எந்த ஒரு அரசு நலத்திட்டங்கள் எங்களுக்கு வருவதில்லை எனவும், எஸ்டி பிரிவில் ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.