பெரம்பலூர் அருகே உள்ள பனங்கூர் கிராமத்தில் பெரியகுளம், புறக்குட்டை, அய்யனார் குளம் ஆகிய மூன்று நீர் நிலைகள் உள்ளன. இந்த கிராம மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்த இந்த நீர் நிலைகள், முறையான பராமரிப்பு இல்லாமலும், தூர் வாரப்படாததாலும் கருவேலமரங்கள் சூழ்ந்து முட்காடாக மாறியது. இதனால் குடிநீருக்கு சிரமப்பட்ட கிராம மக்கள், அதை உணர்ந்து இந்தக் குளங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர்.
இதற்காக வீடு தோறும் குறிப்பிட்ட தொகையை வசூலித்து மொத்தம் ரூ.2.60 லட்சம் நிதி திரட்டிய அக்கிராமத்தினர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு குளங்களை தூர் வாரி, சீரமைத்தனர். மேலும் ஒரு குளத்திலிருந்து மற்றொரு குளத்திற்கு தண்ணீர் செல்வதற்கு இணைப்புப் பாலம் அமைத்தனர்.