பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் வட்டாரப் பகுதிகளில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைப்பதற்காக சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விசிக தலைவருமான திருமாவளவன் பெரம்பலூர் வந்திருந்தார். ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான 6 பேரின் விடுதலை ரத்து செய்யப்படமாட்டது என நம்புவோம் என தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், 'ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளாக சிறையில் இருந்த 6 பேர் அண்மையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் இந்திய அரசு அவர்களை விடுவித்ததை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது எதிர்பார்த்த ஒன்றுதான். இதனை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்றாகும். அவர்களுடைய விடுதலையினை ரத்து செய்யப்படக்கூடிய நிலை உருவாகாது என்று நம்புகிறோம்' என்றார்.