பெரம்பலூர் -அரியலூர் மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலத்தில் நடைபெறவிருக்கும் மாநாட்டை வெற்றி மாநாடாக நீங்கள் மாற்றிக்காட்டிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "மதுரையில் அண்மையில் கேலிக்கூத்தான ஒரு மாநாடு நடைபெற்றது. அதே சமயம் நாம் மக்களின் மிக முக்கிய பிரச்சனையான நீட் தேர்வுக்காக அறப்போராட்டம் நடத்தினோம். நீட் தேர்வுக்கு எதிராக போராட ஒரு உதயநிதி போதாது. நீங்கள் அனைவரும் உதயநிதி போல் செயல்பட வேண்டும்.
தமிழக மக்கள் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு அற்புதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆனால் மத்தியில் ஆளும், 9 ஆண்டுகால பாஜக அரசால் வாழ்ந்தது அதானி எனும் ஒரே ஒரு குடும்பம் மட்டும்தான். அண்மையில் வெளியான சிஏஜி அறிக்கையில் மத்திய பாஜக அரசு சாலை அமைத்தல், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல திட்டங்களில் ரூ.7 லட்சம் கோடிக்கு மேல் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.