பெரம்பலூர் கல்குவாரி டெண்டர் விவகாரத்தில் பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதலில் ஈடுபட்ட 12 பேர் அதிரடியாக கைது பெரம்பலூர்: எளம்பலூர், கல்பாடி வடக்கு, செங்குணம், நாரணமங்கலம், நாட்டார்மங்கலம் மற்றும் பாடாலூர் கிழக்கு ஆகிய கிராமங்களில் 31 இடங்களில் உள்ள குவாரிகளில் கற்கள் உள்ளிட்ட கனிம வளங்களை வெட்டி எடுத்து விற்பனை செய்வதற்கான மறைமுக ஏலத்திற்கான விண்ணப்பம் வழங்கும் பணி கடந்த அக்டோபர் 30ஆம் தேதி துவங்கி நேற்று (அக். 31) மாலை 5 மணியளவில் முடிவடைய இருந்தது.
அந்த வகையில் ஒவ்வொரு குவாரிக்கும் அரசு நிர்ணயம் செய்துள்ள தொகையை விட, அதிக தொகைக்கு ஏலம் கேட்பவர்கள், மறைமுகமாக ஏலத்திற்கான விண்ணப்பத்தினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல் தளத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் முத்திரையிட்டு சீல் வைக்கப்பட்ட பெட்டியில் போட்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று (அக்.31) டெண்டர் பெட்டி பிரிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருந்தது. இந்த நிலையில், பெரம்பலூர் கவுல்பாளையத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரும், பாஜக தொழில்துறை பிரிவு மாவட்டத் துனை தலைவருமான கலைச்செல்வன், அவரது சகோரதர் முருகேசன் பெயரில் கல்குவாரியை ஏலம் எடுப்பதற்கான டெண்டர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தொழில்துறை பிரிவு மாவட்ட தலைவரான வேலூரைச் சேர்ந்த முருகேசன் டெண்டர் பெட்டியில் போடுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார்.
அப்போது, அவர்களை திமுகவினர் உள்ளிட்ட ஒரு கும்பல் வழிமறித்து டெண்டரை போட விடாமல் தடுத்துள்ளனர். அதையும் மீறி அவர்கள் அலுவலகத்தில் புகுந்து டெண்டர் விண்ணப்பத்தினை போட முற்பட்டுள்ளனர். அப்போது அவர்களை அலுவலகத்தில் இருந்து வெளியே இழுத்து வந்த திமுகவினர் தாக்கி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவரும், பாஜகவின் தொழில்துறை பிரிவு துணைத் தலைவருமான கலைச்செல்வன், மாவட்டத் தலைவர் முருகேசன் ஆகியோர் மீது திமுக நிர்வாகிகள் மற்றும் ரவுடி கும்பல் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரின் தனி உதவியாளர் மகேந்திரன், பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை எவ்வித பாரபட்சமும் இன்றி உடனடியாக கைது செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவிக்கு அறிவுறுத்தி உள்ளார். அதன் பேரில், பெரம்பலூர் மாவட்ட போலீசார் 12 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் விவரம்: பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒகளூர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், ஒகளூர் திமுக ஒன்றிய கவுன்சிலர் கலையரசியின் கணவர் கொடியரசன், கைப்பெரம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த அன்புச்செல்வன், அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த லெனின், புதுவேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்துறை அருகே உள்ள இரும்புலிக்குறிச்சியை சேர்ந்த தர்மராஜ், செந்துறை அருகே உள்ள சேடக்குடிக்காடு செல்வம், செந்துறை அருகே உள்ள நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி, செந்துறை அருகே உள்ள சேடக்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த இளங்கண்ணன், செந்துறையைச் சேர்ந்த மாரிமுத்து உட்பட 12 பேரை பெரம்பலூர் மாவட்ட போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:மதுரை சுற்றுலா ரயில் தீவிபத்து விவகாரம்: 5 பேருக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!