பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (74). இவர், எண்ணற்ற மரங்களை நாற்பதாண்டு காலம் பாதுகாத்து வருகிறார். இவர், பெரம்பலூர் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு மன்னாத சுவாமி பச்சையம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான 15 ஏக்கர் நிலப்பரப்பிலுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பலன் தரக்கூடிய மரங்களை 40 ஆண்டு காலமாக பாதுகாத்து வருகிறார்.
இது குறித்து மரங்களை பாதுகாத்து வரும் கருப்பையா கூறியதாவது, “நான் சின்ன வயதில் இருக்கும்போதே நந்தவனம் உருவாக்கி சுமார் 20 ஆண்டு காலம் அதைப் பாதுகாத்து வந்தேன். அதனைத் தொடர்ந்து கோயிலை சுற்றி மரம் வைப்பதற்காக யோசனை செய்து, மரம் வைத்து தற்போது பாதுகாத்து வருகிறேன்.
மேலும் பச்சையம்மன் திருக்கோயிலில் இருபத்தைந்து ஆண்டுகாலமாக தர்மகர்த்தாவாக பொதுமக்களுடைய ஒத்துழைப்போடு இருந்து வருகிறேன். தற்போது 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோயில் புதுப்பித்து குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. இந்த மரங்களை வைப்பதால் ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் நிழல் தருவதற்கும், மனிதர்கள் இளைப்பாறுவதற்கு, பறவைகள் பசி ஆறுவதற்கு உதவுகிறது. ஒரு உயரிய நோக்கோடு மரம் வைத்து தற்போது அதனை பாதுகாத்து வருகிறேன்” எனத் தெரிவித்தார்.
இது குறித்து அவர், “பச்சையம்மன் திருக்கோயிலைச் சுற்றிலும் பச்சைப்பசேல் என்று சோலைவனமாக காட்சியளிக்கும் மரங்கள், ஏரிக்கரை ஓரம் கரும காரியம் நடைபெறும் இடம், கீழப்புலியூர் கிராமத்தில் உள்ள பல்வேறு கோயில்கள் முன்பு மயானத்தில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து 40 ஆண்டு காலம் பாதுகாத்து வருகிறேன்.
அரசமரம், ஆலமரம், புளியமரம் உள்ளிட்ட பல்வேறு மரங்களை நட்டு பாதுகாத்து வருகிறேன். மக்களுடைய சௌகரியத்திற்காக மரங்கள் நடுகிறேன், என்னுடைய சுயநலத்திற்காக நடவில்லை. நம்மால் இயன்ற ஒரு சிறிய உதவியை மக்களுக்கு செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் மரங்கள் நட்டுவருகிறேன்” என தெரிவித்தார்