பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்கள் கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தர துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில், நடப்பாண்டில் பரவலாக 1 லட்சத்து 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது. ஆனால், போதிய அளவு மழை இல்லாமலும், படைப்புழு தாக்குதல் காரணத்தினாலும் குன்னம், வேப்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பயிரிடப்பட்ட மக்காச்சோளப் பயிர்கள் பாதிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்ந்து நிவாரணங்கள் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றனர். படைப்புழுக்களால் பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.