பாம்பு கடித்த நபரை விரைந்து காப்பாற்றிய காவலர்கள் - குவியும் பாராட்டுகள் - காவல்துறை
பெரம்பலூர்: பாம்பு கடித்த நபரை காவலர் ரோந்து வாகனத்தில் அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், கோனேரி பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் அப்பகுதியிலுள்ள பழக்கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், பாஸ்கரனை நேற்று திடீரென பாம்பு கடித்தது. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பாலசுந்தரம், காவலர்கள் மணிகண்டன், மாது ஆகியோர் பாம்பு கடித்த நபரை மீட்டு உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க உதவி செய்து காப்பாற்றினர். துரிதமாக செயல்பட்டு உயிருக்கு போராடிய நபருக்கு உதவிய காவல்துறையினரை பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் பாராட்டி வருகின்றனர்.