தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தானியங்களில் ஐஸ்கிரீம்: அசத்தும் பட்டதாரி விவசாயி! - இயற்கை விவசாயம்

பெரம்பலூர்: சிறுதானிய வகைகளில் ஐஸ்கிரீம் செய்து லாபம் ஈட்டும் எம்.பி.ஏ. பட்டதாரி மாதேஸ்வரன் வேலைதேடும் பட்டதாரிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

தானியங்களில் ஐஸ்கிரீம் தயாரித்து அசத்தும் எம்.பி.ஏ பட்டதாரி!!.

By

Published : Jul 17, 2019, 5:42 PM IST

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் நக்கசேலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் முதுகலை வணிக நிர்வாகம் (எம்.பி.ஏ.) படித்துள்ளார். பட்டம் பெற்றவுடன் சென்னையில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்துவந்துள்ளார்.

இயற்கை விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட மாதேஸ்வரன் சென்னையில் பணிபுரிந்த வேலையை விட்டுவிட்டு சொந்த கிராமத்திற்கு வந்து இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டார்.

பெரம்பலூர் மாவட்டம் விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட மாவட்டமாகும். இங்கு மழையை நம்பி சாகுபடி செய்யப்படுகிறது. பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களுக்கு அடுத்தபடியாக அங்கு பரவலாக சிறு தானிய வகைகளும் சாகுபடி செய்யப்படுகின்றன.

இதனால் மாதேஸ்வரன் தனது வயலில் குதிரைவாலி பயிர் சாகுபடி செய்தார். பின்பு மெள்ள மெள்ள சிறு தானிய வகைகளான கம்பு, கேழ்வரகு, சோளம் பயிர்களை பயிரிட்டு விற்பனை செய்தார். நாளடைவில் சிறு தானிய வகைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சற்று வித்தியாசமாக சிந்தித்த மாதேஸ்வரன், சிறுதானிய வகைகளிலிருந்து ஐஸ்கிரீம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். குழந்தைகளுக்கு நேரடியாக சிறுதானிய வகைகள் கொடுத்தால் உண்ண மறுத்தாலும் அதனை ஐஸ்கிரீம் வடிவில் செய்து கொடுக்கும் முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதனால் கம்பு, கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட சிறுதானிய வகைகளிலும் ஐஸ்கிரீம் தயாரிப்பில் ஈடுபட்டுவந்தார். இவரின் புதிய முயற்சிக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இதனால் பிரபலமடைந்த அவருக்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் முதல் திருமணம் உள்ளிட்ட பல்வேறு குடும்ப நிகழ்ச்சிகள் வரை ஐஸ்கிரீம் ஆர்டர்கள் கிடைக்கத் தொடங்கின.

பொதுவான ஐஸ்கிரீம் வகைகளிலிருந்து மாறுபட்ட சுவையும் விலை குறைவும் கொண்ட இந்த ஐஸ்கிரீம் வகைகள் உடலுக்கு சத்துள்ள தானியத்தில் தயாரிப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி வாங்கிச் சென்று சாப்பிடுகின்றனர்.

சிறுதானிய வகைகளில் ஐஸ்கிரீம்

மாதேஸ்வரன் மேலும் சிறிய ஐஸ்கிரீம் கடை வைத்து நடத்திவருகிறார். இளநீர், பழவகைகளிலிலும் ஐஸ்கிரீம் தயாரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுவருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details