பெரம்பலூர்:திண்டுக்கல் நாகல் நகரை சேர்ந்தவர் குப்புசாமி. இவர் தனது உறவினர்களுடன் ஒரு பயணிகள் வேனில் திருவண்ணாமலை சென்றுள்ளார். பின் அங்கிருந்து அனைவரும் மீண்டும் திண்டுக்கல் செல்வதற்காக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே இன்று (ஜூன் 5) அதிகாலை சுமார் 2:30 மணி அளவில் பயணம் செய்தனர்.
அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டரை முந்த முயற்சி செய்த வேன் நிலை தடுமாறி டிராக்டர் மீது மோதி, சாலை நடுவே இருந்த சென்டர் மீடியன் மீது ஏறி நின்றது. இந்த விபத்தில் டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்ததில், அதனை ஓட்டி வந்த ராமநாதபுரம் அருகே உள்ள முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த சாமிதாஸ் மற்றும் அருகே அமர்ந்திருந்த சேகர் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர்.
இந்நிலையில் பயணிகள் வேனில் வந்தவர்கள் மற்றும் டிராக்டரில் வந்தவர்கள் காயமடைந்ததை தொடர்ந்து, அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளது. அப்போது திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஆம்புலன்சை நிறுத்தி காயம் அடைந்தவர்களை ஏற்றும் போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அதி வேகமாக வந்த தனியார் ஆம்னி பஸ் விபத்து நடந்த இடத்தில் தனது கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால், வலது புறமாக சென்டர் மீடியங்களில் தாண்டி எதிர் திசையில் காயமடைந்தவர்களை ஏற்றுக் கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் மற்றும் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் திண்டுக்கல் நாகல் நகரை சேர்ந்த குப்புசாமி, அவரது பேத்தி கவிப்பிரியா மற்றும் பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை கிராமத்தைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ராஜேந்திரன் ஆகிய மூவரும் ஆம்னி பஸ்ஸில் சிக்கி உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.