பெரம்பலூர்:அருகே மேலப்புலியூர், நாவலூர் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 5 கோயில்களில் உண்டியல், கலசம் உள்ளிட்டவைகள் திருடு போனது. இதுகுறித்து பொதுமக்கள் காவல் துறையிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நாவலூர் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரிநாள் அன்று விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
அதற்காக மைக் செட், ஸ்பீக்கர் உள்ளிட்டவை வைக்கப்பட்ட நிலையில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஸ்பீக்கர் போன்ற சில பொருட்கள் திருடு போனது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், சிசிடிவி காட்சிகளை வைத்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் அஜாக்கிரதையாகப் பதில் கூறி அனுப்பி உள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சிசிடிவி பதிவுகளை வைத்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட களரம்பட்டியைச் சேர்ந்த சந்துரு, நாவலூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் ஆகிய இரண்டு பேரை பொதுமக்களே பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.