பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், மேல உசேன் நகரம் கிராமத்தில் 1 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான மறுசீரமைப்பு குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. திட்டப்பணிகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிதாக இரண்டாயிரம் பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. அதற்கான டெண்டர் விரைவில் கோரப்பட்டு, புதிய பேருந்துகள் வாங்கப்படும்.
அரசுப்பேருந்துகள் தனியார் மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணத்திட்டம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்திட்டம் எனப் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. இந்தத்திட்டங்கள் அனைத்தும் தொடரும், தனியார் மயம் என்ற பேச்சுக்கு இடமில்லை.