தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர், நிலுவையில் உள்ள ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (ஆக. 26) இரண்டாவது நாளாக ஊரக வளர்ச்சித் துறையினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
”கரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொள்ளாமல் வளர்ச்சித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நிர்ப்பந்திப்பதை கைவிட வேண்டும். கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு ஊழியர்களை பழிவாங்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்ட மாவட்ட மாறுதல்களை, உடனே ரத்து செய்ய வேண்டும்.
முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் என்பவர் மீது ஒழுங்கு நடவடிக்கை குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்பினை நடைமுறைப்படுத்த வேண்டும். ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த பங்கேற்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள 17 குற்ற குறிப்பாணைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலைமையிலும் இப்போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை பிரிவு அலுவலகம் ஆகிய இடங்களிலும் 150க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித் துறையினர், உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.