வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் பெரம்பலூர்:தமிழகம் முழுதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி திருத்துதல் மற்றும் மாற்றம் செய்திட, வரும் நவம்பர் 25, 26 ஆகிய இரண்டு நாட்களில் பிரத்யேக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தலைமையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (நவ.18) நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான க.கற்பகம், வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஜனநாயக முறைப்படி மக்களவை தேர்தலை திறம்பட நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைமை தேர்தல் அலுவலர் சத்தியபிரதாசாகு கூறுகையில், “தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல் மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக வரும் 25, 26 ஆகிய தேதிகளில், மாநிலம் முழுதும் உள்ள அனைத்து மாவட்ட வாக்குசாவடிகளிலும், பிரத்யேக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் அக்டோபர் 2023-ன் கணக்குப்படி, மொத்தம் 6 கோடியே 11 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வரும் தேர்தலுக்கு முன் இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடும். 100% விழுக்காடு வாக்கு பதிவு என்பதை இலக்காக வைத்து, மாவட்டம் தோறும் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.
அதைத் தொடர்ந்து, தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க அமைக்கப்படும் குழு வியாபாரிகள், விவசாயிகள் கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்து, உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு உடனே வழங்க நடவடிக்கை இருக்குமா? என்ற கேள்விக்கு, “தேர்தல் நேரத்தில் இது தொடர்பாக வரும் வியாபாரிகள் மற்றும் வாக்காளர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு எனவும், மத்திய தேர்தல் ஆணையம் மூலம் அவ்வப்போது வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கபட உள்ளதால், இது போன்ற பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்றார்.
தொடர்ந்து, மது அருந்திவிட்டு வந்து சுயநினைவின்றி பதிவு செய்யும் வாக்கு செல்லுமா? என்ற
சர்ச்சைக்கு, “ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவருக்கும் வாக்களிப்பது தனி மனித உரிமை சம்பந்தப்பட்டது” என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க:6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு..!