நெறிமுறைகளை கடைபிடிக்காத தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை. அரியலூர்:அரியலூர் மாவட்டம் விரகாலூர் கிராமத்தில் நாட்டு வெடி தொழிற்சாலையில் நடைபெற்ற வெடி விபத்தில் 10 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 7 பேர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் காயங்களுடன் ஆறு பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், வெடி விபத்தில் படுகாயம் அடைந்து அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை அமைச்சர்கள் சி.வி.கணேசன் மற்றும் சிவசங்கர் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், காயமடைந்தவர்கள் பூரண நலம் பெற்ற பிறகு வீடு திரும்புமாறு அறிவுறுத்திய அமைச்சர்கள், தமிழக அரசின் சார்பில் தலா 50,000 ரூபாய் நிவாரண உதவித் தொகைக்கான காசோலைகளை வழங்கினர்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், “படுகாயம் அடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். எனினும், அனைவரும் நலமாக உள்ளார்கள். உயிரிழந்தவர்களுக்கு மூன்று லட்சம் நிவாரணத் தொகையாக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். அவர்கள் வேலை செய்த நிறுவனத்திடம் பேசி மேலும் நிவாரணத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.
சம்பந்தப்பட்ட வெடி தொழிற்சாலை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முறையான பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்காமல் இருக்கும் பட்டாசு தொழிற்சாலைகளின் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்” என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “விபத்துக்களை தடுக்கும் வகையில் தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் மற்றும் மாவட்ட தொழிலாளர் நல அலுவலர் ஆகியோரை கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர், தீபாவளி நெருங்கும் சமயத்தில் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்து, பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்வார்கள். பாதுகாப்பு நெறிமுறைகளை சரியாக கடைபிடிக்கும் பட்டாசு தொழிற்சாலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பாதுகாப்பு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்காத பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படுவது மட்டுமல்லாமல், கடுமையான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்கும்.
தற்போது வெடி விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்குப் பிறகு வெடி விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரிய வரும்” என கூறினார். இதனையடுத்து வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களின் உறவினர்களிடம் அடையாளம் கண்டறிந்து ஒப்படைக்கவும், அவர்களின் உடல்களை எடுத்துச் சென்று அடக்கம் செய்யவும் தேவையான உதவிகளை செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினருக்கு அமைச்சர்கள் அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க:உயர் அதிகாரிகளால் மன அழுத்தம்.. மதுரையில் அங்கன்வாடி பணியாளர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை!