அரியலூர் பகுதியில் இந்திய புவியியல் ஆய்வுத்துறைக்கு தலைமையேற்ற முதல் இந்தியரான எம்.எஸ்.கிருஷ்ணன் என்பவர், 1940ஆம் ஆண்டு ஆய்வு செய்தபோது, பெரம்பலூர் மாவட்டம் சாத்தனூர் கிராமத்தில் 700 மீட்டர் கொண்ட ஓடைப்படுகை ஒன்றில், 18 மீட்டர் நீளம் கொண்ட கல்மரம் ஒன்றை கண்டறிந்தார். இவ்வகை மரங்கள் பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவையாகும். ஆசியாவிலேயே மிகப்பெரிய கல்மரமாகவும் அது உள்ளது. 18 அடி நீளமுள்ள கல் மரத்தை இந்திய தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் கடல் நீரால் சூழப்பட்டு இருந்ததாகவும், புவியியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அக்காலத்தில் வாழ்ந்த உயிரினங்களும் மரங்களும் இயற்கை சீற்றங்களால் மண்ணில் புதையுண்டு, பிற்காலத்தில் பாசில்ஸ் எனப்படும் படிமங்களாக கண்டறியப்பட்டு, தற்போது இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.