விவசாயத்தை முதன்மையாகக் கொண்டது பெரம்பலூர் மாவட்டம். பெருவாரியான மானாவாரி நிலங்கள் மழையை நம்பியே சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய நான்கு ஒன்றியங்களில் பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம், சிறு தானிய வகைகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. தற்பொழுது இங்கு சிறுதானிய வகைகளை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குன்னம் வட்டம் வேப்பூர் பகுதியில் 2015ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் உதவியோடு தொடங்கப்பட்டது 'பாமரர் ஆட்சியியல் கூடம்'. மாவட்டம் முழுவதும் 70 விவசாயிகளோடு கைக்கோர்த்து சுமார் 130 ஏக்கர் பரப்பளவில் சிறுதானிய சாகுபடி செய்யப்படுகிறது.
இதனால் பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை செயற்கை உரம் இட்டு சாகுபடி செய்து வந்த விவசாயிகள், இயற்கை விவசாய முறையில் தீவிரம் காட்டி வருகின்றனர். வேப்பூர், கிளியூர், கீழப்பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் வரகு, திணை, இருங்கு, சோளம், கம்பு, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானிய வகைகள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து பாமரர் ஆட்சியியல் கூடம் ஒருங்கிணைப்பாளர் சரவணன் பேசியதாவது, "பெரம்பலூர் மாவட்டத்தில் சென்ற 20 வருடத்திற்கு முன்பு சிறுதானிய வகைகளை விவசாயிகள் செயற்கை உரம் இட்டு சாகுபடி செய்து வந்தனர். இதனால் அவர்களுக்கு அதிக செலவு ஏற்பட்டது. மேலும் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
சென்ற ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வேப்பூர் ஒன்றியம் தமிழ்நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய ஒன்றியமாக இருந்தது. இதனால் தமிழ்நாடு அரசின் திட்ட கமிஷன் மூலம் ஐந்தாண்டு கால திட்டம் அறிக்கை தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி திட்ட கமிஷன் உதவியோடு பாமரர் ஆட்சியியல் கூடம் தொடங்கப்பட்டு விவசாயிகளுக்கு சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.