பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில், லாடபுரம் மயிலூற்று அருவி, சாத்தனூர் கல்மர பூங்கா மற்றும் வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் திருக்கோயில் எனப் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதனிடையே அங்கு வரலாற்று ரீதியாக பெருமை சேர்ப்பது பெரம்பலூரிலிருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 கி.மீ தூரத்தில் உள்ள ரஞ்சன்குடி கோட்டையே. இதற்கு "துருவ கோட்டை " என்ற மற்றொரு பெயரும் உண்டு.
கருங்கல் சுவர்களால் அமைக்கப்பட்டு மிக கம்பீரமாகக் காட்சி அளிக்கும் இந்த ரஞ்சன்குடி கோட்டை. தற்பொழுது தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் இந்த கோட்டை, 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் தூங்கானை மறவன் என்ற குறுநில மன்னரால் கட்டப்பட்டதாகவும், 1751ஆம் ஆண்டு ’சந்தா சாகிப்’ எனும் பிரெஞ்சு கூட்டுப்படைக்கும், முகமது அலி - ஆங்கிலேய கூட்டுப்படைக்கும் நடந்த "வால் கொண்டா போர்" இந்த ரஞ்சன்குடி கோட்டையை மையமாக வைத்து நடந்ததாகவும் வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன.