விவசாயத்தை முதன்மையாகக் கொண்டது பெரம்பலூர் மாவட்டம். மழையை நம்பியே இம்மாவட்டத்தில் பெரும்பாலான மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்படுகின்றன. இம்மாவட்டத்தில் பருத்தி, சின்ன வெங்காயம், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சாகுபடிசெய்யப்படுகின்றன.
அதில், குறிப்பாக சின்ன வெங்காய சாகுபடியில் பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாட்டில் முதலிடம் வகிக்கிறது. இங்கு சாகுபடிசெய்யப்படும் சின்ன வெங்காயம் திருச்சி, மதுரை, சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காகக் கொண்டுசெல்லப்படுகின்றன.
கர்நாடகா, மைசூரு, உடுமலைப்பேட்டை, அவிநாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து விதைக்காக அங்குள்ள விவசாயிகள் பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்த சின்ன வெங்காயத்தை வாங்கிச் செல்கின்றனர். இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சின்ன வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டு அதிகபட்சமாக ரூ. 150-க்கு விற்பனையானது.
இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் பயிரிட்டனர். ஆனால் பருவநிலை மாற்றத்தால் வேர் அழுகல் நோய் ஏற்பட்டு 80 விழுக்காடு சின்ன வெங்காயம் பாதிப்படைந்தது. இந்நிலையில், இந்தாண்டு மாவட்டம் முழுவதும் சுமார் மூன்றாயிரத்து 500 ஹெக்டேர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைசெய்யப்பட்டுள்ளது.