பெரம்பலூர்:பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள காடூரை சேர்ந்த வழக்கறிஞர் கவியரசு என்பவர் குன்னம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார். அந்த புகாரில் “நான் பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வருகிறேன். நான் பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் பத்ரி சேஷாத்ரி உரையாடியதை பார்த்தேன். அந்த உரையாடலில் ’உங்களால் ஏதும் செய்ய முடியாவிட்டால் நாங்கள் இறங்கிச் செய்கிறோம்.
நாம் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் கையில் துப்பாக்கியைக் கொடுத்து மணிப்பூர் அனுப்பி வைக்கலாம். அங்கு அமைதியைக் கொண்டு வர முடியுமா?. அது மலைப்பாங்கான பகுதி. அங்கு கொலை நடக்கத்தான் செய்யும்’ எனக் கூறுகிறார். இந்த பேச்சு இரு தரப்பு மக்களிடையே அமைதியைக் குலைக்கும் விதமாகவும், வன்முறையைத் தூண்டும் வகையிலும், மேலும் உச்சநீதிமன்ற நீதிபதியை அவமதிக்கும் வகையிலும் பேசினார்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இவரது புகார் தொடர்பாகக் குன்னம் போலீசார் பத்ரி சேஷாத்ரி மீது 153,153A,505(1)(b) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குன்னம் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் இன்று அதிகாலையில் சென்னையில் பத்ரி சேஷாத்திரியைக் கைது செய்தனர்.
போலீசாரால் கைது செய்யப்பட்ட பத்ரி சேஷாத்ரி பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல் நிலையம் அழைத்து வரப்பட்டார். அவரிடம் விசாரணை உள்ளிட்ட நடைமுறைகளை முடித்த போலீசார் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.