பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் ஹரிஹரன். இவரிடம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை பெண் காவலர் ஒருவர், தனக்கு நிலுவையிலுள்ள பண பலன்களை வழங்கக்கோரி கடந்த 2021 செப்டம்பர் மாதம் விண்ணப்பித்தபோது, அப்பெண் காவலருக்கு ஹரிஹரன் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார்.
மேலும் தொடர்ந்து செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியும், நேரிலும் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் காவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. மணியிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் ஹரிஹரன் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், ஹரிஹரன் அங்கு சென்று பொறுப்பேற்கவில்லை.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை செய்து அளித்த அறிக்கையின்படி, பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மை என்பது தெரியவந்ததையடுத்து ஹரிஹரனை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி சரவணசுந்தர் உத்தரவிட்டார். தொடர்ந்து ஹரிஹரன் மீது அலுவல் ரீதியான விசாரணை நடைபெற்று வந்தது.