நெகிழியால் சுற்றுச்சூழல் மாசு, சுகாதாரச் சீர்கேடு மற்றும் புவிவெப்பமடைதல் உள்ளிட்ட பல்வேறு இயற்கைச் சீரழிவுகள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது.
இதனால் பெரம்பலூரில் நெகிழியின் தீமைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அம்மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரான செந்தமிழ் வேந்தன் என்பவர் துணிப்பைகளைத் தயாரித்து வருகிறார்.
பெரம்பலூரில் நகர்ப்புறப் பகுதியில் வசித்து வரும் செந்தமிழ் வேந்தனுக்கு தமிழ் மீது தீவிரப்பற்று உள்ளது. பெரம்பலூர் பழையப் பேருந்து நிலையம் அருகில் உள்ள வளாகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக அச்சுத் தொழில் செய்துவந்த இவர், கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரு முறைப் பயன்படுத்தும் நெகிழிப் பைகளுக்கு மாற்றாக, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துணிப்பை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.
ஈரோட்டில் இருந்து மொத்தமாக துணிகள் கொள்முதல் செய்யப்பட்டு, பெரம்பலூரில் துணிப்பையில் வாசகங்களை அச்சிட்டு வருகிறார்.
இவர் தயாரிக்கும் துணிப்பைகளில் 'நெகிழியைத் தவிர்ப்போம். நிம்மதியாக வாழ்வோம்' உள்ளிட்ட நெகிழியின் தீமைகள் விளக்க வாசகங்களோடு, திருக்குறள்களையும் பைகளில் அச்சிட்டு விற்பனை செய்கிறார்.
அச்சடிக்கும் பணியில் செந்தமிழ் வேந்தன் இந்தத் துணிப்பைகளை திருவிழாக்கள், மளிகைக் கடைகள், இயற்கை வேளாண் நிகழ்வுகள், திருமணம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களின் பயன்பாட்டிற்குத் துணிப்பைகள் தயாரித்து கொடுக்கப்படுகிறது.
சாதாரணத் துணிப்பைகள் 10 ரூபாயிலிருந்து 12 ரூபாய் வரை என்ற விலைக்கும்; பெரிய பைகள் ரூ.50 என விற்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் நெகிழியின் தீமையை உணர்ந்து துணிப்பையின் அவசியத்தை புரிந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
துணிப்பைகள் தயாரிப்பில் இறங்கிய தமிழ் ஆர்வலரின் சிறப்பு தொகுப்பு! இதையும் படியுங்க: கடந்தாண்டு 27 ஆயிரம் டன் நெகிழிக் கழிவுகள் எரிபொருளாக உபயோகம் - மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்