பெரம்பலூர்:வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில் தோட்டக்கலைத் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ப. ஶ்ரீவெங்கடபிரியா நேரில் மேற்கொண்டார்.
அப்போது, பெருமத்தூர் நல்லூர் பகுதியில் பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்திருந்த வயலில் ஆய்வு செய்த ஆட்சியர், பந்தல் அமைப்பதற்கான மானிய உதவித்தொகை முறையாக வழங்கப்பட்டதா, காய்கறிகளுக்கான விதைகள் தரமானதாக உள்ளதா எனக் கேட்டறிந்தார்.
சின்ன வெங்காயம் அறுவடை செய்து பட்டறையில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை பார்வையிட்ட ஆட்சியர், தகுதியுடைய சின்ன வெங்காயம் பயிர்செய்யும் விவசாயிகளுக்கு விரைவில் வெங்காய சேமிப்பு அமைப்பினை அமைக்க அரசு மானிய உதவித்தொகையினை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தோட்டக்கலைத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
விரைவில் மானியம் உதவித் தொகை
தொடர்ந்து," பெரம்பலூர் மாவட்டத்தில் சின்னவெங்காயம், பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. சின்னவெங்காயம் பயிர்செய்யும் விவசாயிகள் அறுவடை செய்த வெங்காயங்களை சேமித்து வைக்க ஏதுவாக, ‘வெங்காய சேமிப்பு அமைப்பு’ கட்டுமானத்திற்காக அரசு 50 விழுக்காடு மானியத்தினை வழங்கி வருகின்றது.
அந்த வகையில், 25 மெட்ரிக் டன் கொள்ளளவு உள்ள சேமிப்பு அமைப்பை உருவாக்க, ரூ.87 ஆயிரத்து 500 வீதம் மானிய உதவி வழங்கப்படுகிறது. அதன்படி, 2020-21 ஆம் ஆண்டிற்கு 400 வெங்காய சேமிப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.