பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் செட்டிகுளம் காமாட்சியம்மன் உடனுறை ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலும் ஒன்றாகும். இந்த நிலையில், இக்கோயிலில் நேற்று (ஜூன்.26 ஆம் தேதி) இரவு வழக்கம் போல நடை சாத்தப்பட்ட பிறகு கோயிலின் கதவை உடைத்து உள்ளே மர்ம நபர் ஒருவர் சென்றுள்ளார்.
பின்னர் கோயிலில் உள்ளே இருந்த சுப்பிரமணியசுவாமி, கால பைரவர் உள்ளிட்ட சுவாமி கற்சிற்பங்களை உடைத்ததோடு மட்டுமல்லாமல், அங்கே இருந்த ஆவணங்களையும் தீயிட்டு எரித்துள்ளார். அதன் பின்னர் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாமளாதேவி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து கோயிலில் உள்ளே இருந்த சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அந்த விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்டது செட்டிகுளம் அருகே உள்ள மாவிலங்கை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் (39) என தெரியவந்தது. பின்னர் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் செல்வராஜ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், இது போன்று பல இடங்களில் கோயிலின் சிற்பங்களை உடைத்து உள்ளார் என்றும் தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் நேற்று பகல் முழுவதும் இந்த கோயிலை சுற்றி திரிந்த அவர் இரவு 11 மணிக்கு மேல் கோயிலின் பிரகார வாசலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, ஸ்ரீ கால பைரவர் கற் சிற்பங்களை சேதப்படுத்தியதோடு அங்கிருந்து ஆவணங்களையும் தீயிட்டு எரித்துள்ளது தெரியவந்துள்ளது.