பெரம்பலூர்: மாவட்டம் வி.களத்தூர் அருகே கட்டப் பஞ்சாயத்து செய்து லட்சக்கணக்கில் அபராதம் வசூலிக்க முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அருகேயுள்ள மரவநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பன் மனைவி அழகம்மாள்.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து கொடுத்துள்ள புகார் மனுவில், "மரவநத்தம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த எங்களது மகன் வேல்முருகன்
எங்கள் ஊரைச் சேர்ந்த திருமணமான 27 வயது பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு வெளியூருக்கு சென்று தலைமறைவாகிவிட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் வி.களத்தூர் காவல் துறையினர் அவர்கள் இருவரையும் தேடி அழைத்து வந்து, சம்பந்தப்பட்ட பெண்ணை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டனர். இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெண் வீட்டார் அமைதியாக இருந்துவருகின்றனர்.
இந்நிலையில் நாங்கள் வசிக்கும் மரவநத்தம் கிராமத்தைச் சேர்ந்த
அழகப்பன்,
நடேசன் அண்ணாதுரை, சின்னசாமி உள்ளிட்ட சிலர் கடந்த 3-ஆம் தேதி கட்டப் பஞ்சாயத்து செய்து, பெண்ணை அழைத்துச்சென்ற குற்றத்திற்காக எனது குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாகவும், வீட்டையும் நிலத்தையும் எங்கள் பெயரில் எழுதி கொடுக்க வேண்டும் என்று மிரட்டினார்கள். இது மட்டுமின்றி ரூ.4.50 லட்சம் அபராதமும் கட்ட வேண்டும் என்று மிரட்டி வருகிறார்கள். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களை கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும்.
என்னையும் எனது குடும்பத்தாருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மனுவை பெற்ற காவல் கண்காணிப்பாளர் மணி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் இது குறித்து தீண்டாமை முன்னணி இயக்கத்தினர் தெரிவிக்கும் போது, காவல் துறையில் போதுமான அலுவலர்கள் இல்லாததால் இதுபோன்ற கட்டபஞ்சாயத்து தொடர்ந்து கிராமப்புறங்களில் நடந்துவருகிறது.
தற்போது மரவநத்தம் கிராமத்தில் கட்டப்பஞ்சாயத்து பாதிக்கப்பட்டுள்ள அழகம்மாள் குடும்பத்தினர் அளித்துள்ள புகார் மனு மீது நடவடிக்கை இல்லை என்றால் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.