கனரக வாகனம் மோதி பெண் உயிரிழப்பு: ஊராட்சி செயலாளர் மீது புகார் - ஊராட்சி மன்ற செயலர் மீது மனு
பெரம்பலூர்: நூறு நாள் வேலைத் திட்ட பணியின்போது பெண்ணின் உயிரிழப்புக்கு ஊராட்சி செயலாளரின் அலட்சிய போக்கே காரணம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் திம்மூர் கிராமத்திலுள்ள ஏரிக்கரையில் 100 நாள் வேலை திட்ட பணிகள் நடைபெற்று வந்தது. நேற்று (செப்டம்பர் 16) திட்ட பணிகளின்போது ஜேசிபி, டிராக்டர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
அப்போது பாரம் ஏற்றிய நிலையில் டிராக்டர் பின்னோக்கி நகர்த்தப்பட்டது. அதில் திம்மூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவரின் மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து படுகாயமடைந்து ஒரு மணி நேரம் தாமதமாக அரியலூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன்பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஜெயலட்சுமி உயிரிழந்தார்.
தன்னுடைய மனைவின் இறப்பிற்கு ஊராட்சி செயலாளரின் அலட்சியப்போக்கே காரணம் எனவும் அவர் மீது துறை அலுவலர்கள் எந்தவித விசாரணையும் நடத்தாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உயிரிழந்த ஜெயலட்சுமி கணவர் மற்றும் அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.