பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலானோர் விவசாய தொழில் செய்துவருகின்றனர். பெருவாரியான மானாவாரி நிலங்களைக் கொண்ட இம்மாவட்டத்தில் பருத்தி, மக்கா, சின்ன வெங்காயம் முதலியன பயிரிடப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் வாலிகண்டபுரம், மேலப்புலியூர், சிறுவாச்சூர் ஓலைப்பட்டி, எளம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது இயற்கை விவசாயம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
பெரம்பலூர் புதுநடுவலூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் மணி தனது தந்தையுடன் சேர்ந்து தற்போது இயற்கை விவசாய முறையில் கம்பு சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே தங்களுடைய வயலில் மாப்பிள்ளை சம்பா, யானைக்கவுனி உள்ளிட்ட பாரம்பரிய அரிசி வகைகளையும் மிளகாய் உள்ளிட்ட காய்கறி வகைகளையும் இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்ததாக கூறும் அவர், தற்போது கம்பு சாகுபடியில் தீவிரமாக செயல்பட்டுவருகிறார்.