பெரம்பலூர் நகர்ப்புற பகுதியான துறைமங்கலம் பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவருடைய மகன் கபிலன் (27). இவர் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு ஒன்றில் சிறைக்குச் சென்ற கபிலன் பிணையில் வெளியில் வந்திருந்தார்.
இதனிடையே, கபிலன் நேற்றிரவு பெரம்பலூர் துறைமங்கலம் கேகே நகர் பகுதி கிராம நிர்வாக அலுவலகம் அருகே கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர்.
ஒரு தலை காதல் காரணமா?
இந்நிலையில், ஒரு தலை காதல் விவகாரத்தால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாகவே கபிலன் கொல்லப்பட்டிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு துறைமங்கலம் கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை கபிலன் காதலிப்பதாக தகராறு செய்துவந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அப்பெண்ணின் அக்காவின் கணவர் கபிலனை கண்டித்ததாகத் தெரிகிறது. அதுமட்டுமின்றி நேற்றிரவு கபிலன் அப்பெண்ணின் தம்பியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக கபிலனை அவர் காதலிக்கும் பெண்ணின் மாமா, தம்பி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் துறைமங்கலம் விஏஓ அலுவலகம் அருகே வைத்து சராமாரியாக தாக்கியுள்ளனர்.
கபிலனை 10-க்கும் மேற்பட்டோர் தாக்கும் காணொலி அப்போது எடுக்கப்பட்ட காணொலி இணையத்தில் வெளியாகி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒரு தலை காதல் விவகாரத்தால் இவர்கள்தான் கபிலனை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
இந்தக் கொலை தொடர்பாக ஆறு பேரை இதுவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற சிலரையும் தேடிவருகின்றனர். இச்சம்பவம் குறித்து பெரம்பலூர் காவலர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:ரவுடி கழுத்தறுத்து கொலை: பெரம்பலூரில் பரபரப்பு!