பெரம்பலூர்:கொட்டரை அருகே உள்ள ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த அழகுதுரை என்பவர் கொட்டரை கிராமத்தில் உள்ள தனது வயலுக்கு மனைவியுடன் சென்றுள்ளார். அவ்வாறு சென்று கொண்டிருக்கும் பொழுது, புதர்கள் நிறைந்த பகுதியில் தூரத்தில் புதிதாகவும், வித்தியாசமாகவும், அவர் இதுவரை பார்த்திராத விலங்கு ஒன்றினை பார்த்துள்ளார். அது பார்ப்பதற்குச் சிறுத்தைப் புலி போலத் தெரிந்துள்ளது.
இதனையடுத்து அந்த பகுதிக்குச் சென்று பார்த்த பொழுது அதன் காலடித்தடம் தெரிந்துள்ளது. அந்த காலடி தடத்தினை தனது செல்போனில் போட்டோ எடுத்துக் கொண்ட அழகுதுரை இதுகுறித்து கிராம மக்களிடையே தகவல் தெரிவித்துள்ளார். அதனை பார்த்த சிலர் அது சிறுத்தை புலியின் காலடி தடம் என்று தெரிவித்துள்ளனர். இந்த தகவல் காட்டு தீ போல ஆதனூர், கொட்டரை, குரும்பாபாளையம் மற்றும் பெரியம்மாபாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் பரவியதால் பொதுமக்களிடையே பரபரப்பும், பீதியும் ஏற்பட்டது.
இதனால் அப்பகுதி கிராம மக்கள் சம்மந்தப்பட்ட பகுதியில் உள்ள வயல்வெளிக்குச் செல்வதைத் தவிர்ப்பதோடு ஆடு மாடுகளையும் அந்த பகுதிக்குள் விடாமல் தடுத்து வருகின்றனர். மேலும் இந்த பகுதி கிராம மக்களிடையே ஏற்பட்டுள்ள பீதியைக் குறைக்க தமிழக, அரசு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அழகுதுரையிடம் கேட்ட போது, நானும், மனைவியும் வயலுக்குச் சென்ற பொழுது தொலைவில் புதிதாக நான் இதுவரையில் கண்டிராத ஒரு விலங்கினத்தை பார்த்தேன். அது பார்ப்பதற்குச் சிறுத்தைப் புலி போல தோன்றியதால் எனக்கு அச்சம் ஏற்பட்டது. இது குறித்து பொது மக்களிடையே தெரிவித்தேன் என்றார்.