பெரம்பலூர்:வாழ நினைத்தவர்களுக்கு இந்தப்பூமியில் வழியா இல்லை என்ற வாசகத்திற்கேற்ப பெரம்பலூர் அருகே தன்னுடைய வித்தியாசமான முயற்சியால் உணவகத் தொழிலில் வெற்றி கண்டுள்ளார் குன்னம் மாவட்டம் வேப்பூர் அருகே அகரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த வரதராஜன். பள்ளிப்படிப்பை முழுவதுமாக முடிக்க முடியாது, சொந்த ஊரில் விவசாயம் பார்த்து வந்த இவர், 1995ஆம் ஆண்டு துபாய்க்கு வேலைக்குச் சென்றுள்ளார். அங்குள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு சமைத்துக் கொடுக்கும் வேலையை மாதம் 5000 சம்பளத்திற்கு செய்துவந்துள்ளார்.
15 ஆண்டுகள் தன்னுடைய வாழ்வை துபாயில் கழித்த வரதராஜன், சில ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூர் திரும்பிவிட்டார். இங்குவந்து வேலையில்லாமல் இருந்த அவருக்கு, அவரது மனைவியின் சகோதரர் உட்பட உறவினர்கள் அக்ரஹாரம் பகுதியில் சாலையோரமாக ஹோட்டல் ஒன்றை வைத்துக்கொடுத்துள்ளனர்.
பெரம்பலூரில் வரவேற்பை பெற்றுள்ள சப்பாத்தி வித்தியாசமான உணவை அறிமுகப்படுத்த எண்ணிய அவருக்கு, துபாயில் செய்த டிரம் ரொட்டி நினைவுக்கு வந்துள்ளது. இந்த டிரம் ரொட்டியை நமது கடையில் செய்து மக்களுக்கு கொடுத்தால் என்ன என எண்ணி அதனை தனது ஹோட்டலில் அறிமுகப்படுத்தியுள்ளார். எண்ணெய் பயன்படுத்தாமல் செய்யப்படும் இந்த ரொட்டி அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பெரம்பலூர் மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்ட மக்களுக்கும் இந்த டிரம் ரொட்டி குறித்து சமூக வலைதளங்கள் மூலம் தெரிந்துள்ளது.
நாம் இதுகுறித்த செய்தி சேரிக்கச் சென்றபோது சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வீராச்சாமி என்பவர் பேசும்போது, "டிரம் சப்பாத்தி கடை குறித்து சமூக வலைதளங்களில் பார்த்தேன். பெரம்பலூர் செல்லும்போது ஒருமுறை சாப்பிடவேண்டும் என எண்ணிக்கொண்டிருந்தேன். தற்போது, வேலை நிமித்தமாக பெரம்பலூர் வந்துள்ள எனக்கு டிரம் சப்பாத்தியை சாப்பிட வாய்ப்புக்கிடைத்துள்ளது. எண்ணெய் பயன்படுத்தாமல் சப்பாத்தி சுடப்படுவதால் நல்ல சுவையாகவும் இருக்கிறது" என்றார்.
டிரம் சப்பாத்தி கடை மாலை 4 மணிக்குத் தொடங்கி 8 மணிவரை சுமார் 4 மணிநேரம் மட்டுமே செயல்படுகிறது. ஆனால், இந்த நான்கு மணிநேரமும் கடைக்கு ஆட்கள் வந்தவண்ணமே உள்ளனர். 15ஆண்டுகளாக துபாயில் வாழ்வை கழித்து வந்த வரதராஜன் நம்மிடையே பேசும்போது, " 1995ஆம் ஆண்டு துபாய்க்கு வேலைக்காக சென்றேன். நல்ல சம்பளம் இல்லாததால் சொந்தத் தொழில் தொடங்கலாம் என நான் எண்ணிக்கொண்டிருந்தபோதுதான். டிரம் சப்பாத்தியை நம்மூரில் சமைத்துக்கொடுத்தால் என்ன என்ற யோசனை வந்தது. பெரம்பலூரில் புதிய முயற்சியாக டிரம் சப்பாத்தியை அறிமுகப்படுத்தி கிராம மக்களின் வரவேற்போடு கடை நல்லபடியாக இயங்குகிறது" என்றார்.
டிரம் சப்பாத்தி சுடும் வரதராஜன் துபாயில் வேலைபார்த்து வந்தபோது, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் தனது தந்தை தற்போது, குடும்பத்துடன் இருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக அவரது மகள் கலைச்செல்வி கூறுகிறார்.
இதையும் படிங்க:தன்னம்பிக்கை நாயகன்! காளான் வளர்ப்பில் அசத்தும் சேலம் இளைஞர்