பெரம்பலூர் நகரின் வடமேற்குப் பகுதியில் பெய்யும் மழை நீரை நகரின் மையப்பகுதியில் உள்ள தெப்பக்குளத்திற்குக் கொண்டு வருவதற்காக 100 ஆண்டுகளுக்கு முன்பு வாய்க்கால் ஒன்று அமைக்கப்பட்டது. ஜார்ஜ் வாய்க்கால் எனஅழைக்கப்படும் இந்த வாய்க்கால் நாளடைவில் காணாமல் போனது.
இருப்பினும் அந்த வாய்க்கால் இருந்ததற்கான சான்றாக பெரம்பலூர் - துறையூர் சாலையில் உள்ள அரணாரை பகுதியில் பழமையான கல்வெட்டு வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கல்வெட்டில் இங்கிலாந்து அரசின் ஆளுகையைக் குறிக்கும் வகையில் ஜார்ஜ் சேனல் 12 டிசம்பர் 1911 என்றும் அதற்குக் கீழாக ஜார்ஜ் வாய்க்கால் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்த ஆய்வாளர்கள், இந்த கல்வெட்டில் இருக்கும் பெயர் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரைக் குறிப்பதாகக் கூறுகின்றனர்.மேலும், புதுடெல்லி உருவாக அடிக்கல் நாட்டப்பட்ட அதே நாளில்தான் இந்த வாய்க்காலானது உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.