பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் அவ்வையார் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சரவணன் (40). இவரது வீட்டிற்கு அருகேயுள்ள மின் கம்பத்திலிருந்து செல்லும் மின் கம்பியானது மிகவும் தாழ்வாக செல்வதால் மின் விபத்து ஏற்படும் வாய்ப்பிருந்துள்ளது.
இதனால் மின் கம்பியை மாற்றியமைக்கக்கோரி பெரம்பலூர் மின்வாரிய அலுவலகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் சரவணன் விண்ணப்பித்துள்ளார். ஆனால், மின் கம்பியை மாற்றியமைக்க மின் வாரியத் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மின்வாரிய பணியாளர்களிடம் சரவணன் கேட்டபோது, உதவி செயற்பொறியாளர் பரிந்துரை செய்தால் மட்டுமே மின் கம்பியை மாற்றியமைக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து மின்வாரிய உதவி செயற்பொறியாளராகப் பணிபுரிந்து வரும் மாணிக்கத்தை அணுகியபோது, ஆயிரம் ரூபாய் கையூட்டு கொடுத்தால் மின் கம்பியை மாற்றியமைக்க பரிந்துரை செய்யவதாக அவர் தெரிவித்துள்ளார்.