பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பென்ன கோணம் கிராமத்தைச் சேர்ந்த பழனிமுத்து என்பவரின் மகன் காமராஜ். பிறந்ததிலிருந்து ஏழு வயது வரை எழுந்து நடக்க முடியாமல் இருந்த இவர், வேலூரிலுள்ள சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று சற்று நடக்கத் தொடங்கினர். ஐந்தாம் வகுப்பு வரை அவரது தாய் இவரை தூக்கிக்கொண்டு சென்று பள்ளியில் படிக்க வைத்தார். தொடர்ந்து ஆறு முதல் 12ஆம் வகுப்பு வரை இவரது கிராமத்திற்கு அருகிலுள்ள லப்பைக்குடிகாடு கிராமத்தில் தனது மூன்று சக்கர வண்டியில் சென்று பயின்றுள்ளார்.
பத்தாம் வகுப்பில் 403 மதிப்பெண்களும், 12ஆம் வகுப்பில் 1007 மதிப்பெண்கள் பெற்றும் சாதனை படைத்தார். தொடர்ந்து கல்லூரி பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் பிகாம் பட்டப்படிப்பு படித்து முடித்தார். இவரது கிராமத்திலிருந்து இவர் பயின்ற கல்லூரிக்கு 50 கி.மீ தொலைவு இருந்தாலும் மனம் தளராமல் விடாமுயற்சியோடு கல்லூரி படிப்பை முடித்தார்.
ஆடிட்டர் ஆக வேண்டும் என்ற சிறுவயது கணவை அடையும் எண்ணத்தில் எம்காம், எம்பிஎல் படிப்பையும் இவர் வெற்றிகரமாக முடித்தார். திருச்சியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் வங்கி பணிக்காக படித்து கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐபிபிஎஸ் (IBPS) பிரிலிமினரி தேர்வில் வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து மெயின்ஸ் தேர்வில் வெற்றி பெற்றார். இந்தியன் வங்கியில் பணியாற்றுவதற்கு தேர்வாகியுள்ளார். கரோனா ஊரடங்கு காரணமாக பணி நியமன ஆணை மட்டும் இன்னும் பெறவில்லை.