பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி எறையசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் சதீஷ்(27). இவருக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த ஷாலினியுடன் பிப்ரவரி ஏழாம் தேதியன்று திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் நான்கு கிராம் தாலிக்குத் தங்கம், 25 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை பெற ஆன்லைன் மூலம் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஷாலினி விண்ணப்பித்திருந்தார்.
இவ்விண்ணப்பத்தை சரிபார்க்க பெரம்பலூர் ஒன்றிய அலுவலரான ஷெரீன் ஜாய்(54) எறையசமுத்திரம் கிராமத்துக்கு ஜனவரி 27ஆம் தேதி வந்தார். அப்போது ஷாலினி, குடும்பத்தினருடன் வெளியே சென்றதால் வீடு பூட்டியிருந்தது. ஆகவே, ஷெரீன் ஜாய் அலைபேசி மூலம் ஷாலினி குடும்பத்தினரை தொடர்புகொண்டு இத்திட்டத்தை பரிந்துரை செய்வதற்காக இரண்டாயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.