பெரம்பலூர்: வி.களத்தூர் அருகே உள்ள தொண்டப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரில் வசிக்கும் அவரின் சொந்த சகோதரியின் மகளான அம்சவள்ளியை பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்திருந்தனர். திருமணம் ஆனதிலிருந்து கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இதனால் ராமமூர்த்தியின் வீட்டிற்கும், அம்சவள்ளியின் பெற்றோர் வீட்டிற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று வழக்கம் போல கணவன் மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (ஜூலை.19) காலை ராமமூர்த்தி வயல் வழியே, அவரது மாமனாரான வேலுச்சாமி மாடுகளை ஓட்டிச் சென்றுள்ளார்.
விவசாயி அடித்துக் கொலை
எனது வயல் வழியாக மாட்டை ஓட்டிச் செல்லக்கூடாது என்று ராமமூர்த்தி தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது ராமமூர்த்தியின் மைத்துனரும், அம்சவள்ளியின் தம்பியுமான சக்திவேல், மனைவி அம்சவள்ளி ஆகியோர் கற்களால் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த ராமமூர்த்தி, மயங்கி விழுந்த சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
காவல்துறையினர் விசாரணை
இதுகுறித்து தகவலறிந்த வி.களத்தூர் காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று ராமமூர்த்தியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய வேலுச்சாமி, அம்சவள்ளி, சக்திவேல் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'ஆபாச காணொலிகள் அனுப்பியோர் மீது நடவடிக்கை எடுங்க' - பெண் அரசியல் பிரமுகர்