பெரம்பலூர்:தமிழ்நாட்டில் பிப்ரவரி 19 அன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட திமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று இரவு (பிப்ரவரி 10) திமுக கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிகளுக்குத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
பின்னர் ஆ. ராசா பேசுகையில், “கரோனா தொற்று காலத்திலும், மழைக் காலத்திலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அந்தச் சூழலை மிகவும் திறமையாகக் கையாண்டார். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியோ, பன்னீர்செல்வமோ வீட்டை விட்டு வெளியேகூட வரவில்லை.
கரோனா பெருந்தொற்று, மழை வெள்ளம் ஆகிய இரு பெரும் சவால்களுக்கு இடையே, அவரே நேரில் களமிறங்கி கரோனா பெருந்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்தவர். ஆயிரம் ரூபாய் தரவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்திவருகின்றனர். ஸ்டாலின் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் 90% வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறார்.
அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை!
விவசாய விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையைப் பெற்றுத் தருவேன் என்று 2011 தேர்தல் அறிக்கையில் கூறிய ஜெயலலிதாவோ, 20 ரூபாய்க்கு ஆவின் பால் பாக்கெட் தருவேன் என்று 2016 தேர்தல் அறிக்கையில் கூறிய எடப்பாடி பழனிசாமியோ, பன்னீர்செல்வமோ தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.