பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள தழுதாழை கிராமத்தில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுடன் கூடிய நாயக்கர் கால நடுகல் கண்டறியப்பட்டுள்ளது.
தழுதாழை பகுதியில் வரலாற்று ஆய்வாளர் மகாத்மா செல்வபாண்டியன் கள ஆய்வு மேற்கொண்ட போது "ஔவ்வா தாத்தா கோயிலில்" உள்ள நாயக்கர் கால நடுகல்லையும், அதில் உள்ள கல்வெட்டையும் கண்டறிந்தார்.
இது குறித்து ஆய்வாளர் ம.செல்வபாண்டியன் கூறும்போது, "தழுதாழை கிராமத்தில், தழுதாழையிலிருந்து பெரியம்மாபாளையம் செல்லும் சாலையின் மேற்குப் பகுதியில் 'ஔவ்வா தாத்தா கோயில்' உள்ளது. இதனை தாத்தா பாட்டி கோயில் என்று அழைப்பார்கள்.
இந்த கோயிலில் உள்ள பலகைச் சிற்பத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு கல்வெட்டு உள்ளது. இது கி.பி. 17-18ஆம் நூற்றாண்டில் வள்ளுவப்பாடியின் தலைவரான சவாரு சின்னவாட் நாயக்கரின் நினைவுக் கோயில் ஆகும். இங்குள்ள பலகைச் சிற்பத்தில், 'வள்ளுவப்பாடி நாடுடைய சவாரு சின்னவாட் நாயக்கர் கோயில்' எனும் கல்வெட்டு காணப்படுகிறது.
குத்துக்கற்கள் நட்டு வைக்கப்பட்ட திறந்தவெளியே இந்த கோயில். பெரிய குத்துக்கல் தாத்தா எனவும், ஒன்றரை அடி உயரத்துடன் வணங்கிய நிலையில் உள்ள பெண் சிற்பம் பாட்டி (ஔவ்வா) எனவும் வணங்கப்படுகின்றன. பிற குத்துக்கற்கள் முன்னோர்களாகக் கருதப்பட்டு வணங்கப்படுகின்றன.
கல்வெட்டு இடம் பெற்றுள்ள பலகைச் சிற்பத் தொகுதியில் சிவிகையில் மகாராஜ லீலாசனத்தில் ஒருவர் காட்டப்பட்டுள்ளார். இவரே 'சவாரு சின்னவாட் நாயக்கர்' ஆக இருக்கலாம். சிவிகையை முன்புறம் ஒருவரும் பின்புறம் இருவரும் என மூன்று ஆடவர்கள் சுமந்து செல்கின்றனர். சிவிகையின் முன்புறம் ஒருவர் வாளேந்திச் செல்ல, அடுத்தவர் வெண் கொற்றக் குடையைத் தாங்கியுள்ளார்.
இவ்வரிசையின் பின்பகுதியில் அணிகலன்கள் பூட்டி அலங்கரிக்கப்பட்ட அழகிய புரவியை ஆடவர் ஒருவர் அழைத்து வருகிறார். புரவியின் பின்னே வாளேந்திய வீரர் இடம் பெறுகிறார். ஏழு ஆடவர்களின் தலையும் படியச் சீவி கொண்டையிடப்பட்டுள்ளன. கழுத்தணி, தோள்வளை, கைவளை, இடைக்கச்சு, அரையாடை, தண்டை ஆகியவற்றால் ஆடவர்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளனர். சிவிகையின் முன்புறமும் பின்புறமும் அழகிய ஆடைத் தொங்கல்கள் காணப்படுகின்றன.
இன்றைய திருச்சி மாவட்டத்தின், முசிறி, துறையூர் வட்டம் அடங்கிய பகுதி வள்ளுவப்பாடி நாடு என்று கூறப்படுகிறது. சவாரு சின்னவாட் நாயக்கர் பெரம்பலூர் மாவட்டப் பகுதிக்கு வருகை தந்தபோது எதிர்பாராதவிதமாக இப்பகுதியில் உயிர்நீத்தார். அவருக்காகவே இந்த நினைவுக்கோயில் கட்டப்பட்டதாக தெரிகிறது.
கடந்த 2002ஆம் ஆண்டில் அறிஞர் இரா.கலைக்கோவன், தழுதாழையில் சிவநாதன் என்பவரின் வயற்பகுதியில் இருந்த கல்வெட்டுச் சிற்பத்தைக் கண்டறிந்தார். இச்சிற்பத்தில் குடையொன்றை ஏந்திய காவலாளியும், வாளை நிலத்தில் ஊன்றிய நிலையில் இரு ஆடவர்களும், அவர்கள் அருகே வலக்கையில் மலர் கொண்ட பெண் ஒருவரும் காட்டப்பட்டுள்ளனர்; இச்சிற்பத்தின் மேற்பகுதியில் 'சவாரு சிண்ணவெடி நாயக்கர் கொடி' என்ற கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
தொண்டமாந்துறையைத் தழுதாழையுடன் இணைக்கும் இந்த ஒற்றையடிப் பாதையே, அந்நாளில் சிண்ணவெடி நாயக்கர் கொடியென அறியப்பட்டதாகக் கொள்ளலாம் என அவர் குறிப்பிடுகிறார். மேலும் இக்கல்வெட்டின் எழுத்து பதினேழு முதல் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கணித்துள்ளார்.
இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் சவாரு சிண்ணவெடி நாயக்கர் என்பவரும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சவாரு சின்னவாட் நாயக்கர் என்பவரும் ஒருவராகவே இருக்கலாம். இவரைக் குறித்த மற்றொரு கல்வெட்டே, 'ஔவ்வா தாத்தா கோயில்' கல்வெட்டு எனலாம். இது போயர் சமூக மக்களின் முன்னோர் வழிபாட்டுக் கோயிலாகும். இக்கண்டுபிடிப்பின் வழி, சவாரு சின்னவெடி நாயக்கர் வள்ளுவப்பாடி நாட்டின் தலைவர் அல்லது அந்நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரிகிறது" என்றார்.
இதையும் படிங்க: 1,200 ஆண்டுகள் பழமையான பல்லவ கால லகுலீசா் சிற்பம் கண்டெடுப்பு!