தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அன்னை தெரசா அனைத்து வாகன ஓட்டுநர் நலச் சங்கம் சார்பில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் என்ற இடத்தில் 15க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரோனா பேரிடர் காலத்தில் நலவாரியத் துறை மூலம் உறுப்பினராக உள்ள ஓட்டுநர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு கரோனா பேரிடர் விடுமுறை நாள்களில் மாதச் சம்பளம் தராமல் ,நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும், மத்திய அரசும் மாநில அரசும் தனியார் வாகன ஓட்டுநர்களின் மாதச் சம்பளம் முப்பதாயிரம் ரூபாய் என்று அரசாணையில் வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.