கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் தமிழ்நாட்டிற்கு வேலைக்காக வந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாகனப் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால், சில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு நடைபயணமாக செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் உள்ளனர்.
அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் ராஜஸ்தான், பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், வீடுகளில் டைல்ஸ் ஒட்டுவது, கிரானைட் பதிப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்து வந்தனர். கரோனா பாதிப்பால் ஒரு மாத காலமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் வேலையின்றி தவிக்கும் அவர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல முடிவெடுத்தனர்.