பெரம்பலூரில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 80 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருமாவளவன் எம்.பி. வழங்கினார்.
இதன்பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "கரோனாவைத் தடுக்க அடிப்படை மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை அரசுகள் செய்ய தவறிவிட்டன. மேலும் மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அதிக நிதியை ஒதுக்கீடுசெய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் கரோனா சமூகப் பரவலாக மாறுவதைக் காண முடிகிறது. ஊரடங்கால் வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் அதிகம் பேர் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மத்திய அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தற்சார்பு பொருளாதாரத் திட்டம் மக்களுக்கு உடனடியாக நிவாரணம் அளிக்கும் வகையில் இல்லை. குடிபெயர் தொழிலாளர்களைப் பாதுகாக்க உருப்படியாக எதையும் மத்திய அரசு செய்யவில்லை.
கோயம்பேடு சந்தை ஆரம்பத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதனால்தான் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கரோனா பரவியுள்ளது" என்றார்.