பெரம்பலூர்: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக, கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வந்தது.
குறிப்பாக, பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் வட்டாரப் பகுதியான சிறுகன்பூர், தெற்கு மாதவி, கொட்டரை, சாத்தனூர், ஆதனூர், கொளக்காநத்தம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களில் இடைவிடாது கனமழை பெய்தது.
இதனால், மருதை ஆற்றில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. தெற்கு மாதவி கிராமத்தின் அருகே மருதை ஆற்றுப் பாலத்தின் இருபுறமும் வெள்ளநீர் அதிகளவில் செல்வதால், வாகனங்கள் அந்த பகுதியைக் கடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த வழியே வரும் வாகனங்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.
கிராமங்களில் புகுந்த மழைநீர்; மின்சாரம் துண்டிப்பு
மேலும் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. விளை நிலங்களிலும், வீடுகளிலும் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மழை நீர் வழிந்தோடுவதற்கு, சரியான வடிகால் வசதி செய்யப்படாததால், சிறுகன்பூர், தெற்கு மாதவி உள்ளிட்ட கிராமங்களில் வீடுகளிலும் தெருக்களிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, இந்தக் கிராமங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.