பெரம்பலூர்: எளம்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (33). இவருக்கும், வேப்பந்தட்டை வட்டம் சிறுவயலூர் கிராமத்தைச் சேர்ந்த பிரவீனா என்பவருடன் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ராஜ்குமார், விஜய கோபாலபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில், ராஜ்குமார் அவரது அண்ணி ஆனந்தி மற்றும் திருப்பெயர் கிராமத்தைச் சேர்ந்த சுகன்யா என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகத் தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் 22ஆம் தேதி இரவு 10 மணி அளவில், ராஜ்குமார் தனது மனைவி பிரவீனாவை குபேரன் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் விட்டு விட்டு, தான் வேலைக்குச் செல்வதாகக் கூறி இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது எளம்பலூர் சாமியார் காடு அருகே அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதில் ராஜ்குமாருக்கு காயம் ஏற்பட்டும், பிரவீனாவுக்கு கழுத்து அறுபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இதனை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து ராஜ்குமாரை விசாரணை செய்யும்போது முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறியதாலும், பிரவீனாவின் கழுத்தில் இருந்த நகைகள் அப்படியே இருந்ததாலும் சந்தேகமடைந்த காவல் துறையினர், ராஜ்குமாரைப் பிடித்து விசாரணை செய்துள்ளனர். இதில் ராஜ்குமார் கொடுத்த வாக்குமூலத்தில், தனது அண்ணி ஆனந்தி மற்றும் திருப்பெயர் கிராமத்தைச் சேர்ந்த சுகன்யா ஆகியோருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததால், தன் மனைவிக்கும் தனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை வந்ததாக கூறியுள்ளார்.