பெரம்பலூர்: தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் கிராம மற்றும் நகர முன்னேற்ற கள ஆய்வு பணி பொறுப்பாளர்கள் கூட்டம் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா, நாளுக்கு நாள் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வன்முறையும், தேச விரோத செயல்களும், அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அதற்கு உதாரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக கவுன்சிலர் ஒருவரால், ஒரு ராணுவ வீரர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இது போன்ற வன்முறை செயல்களை திமுகவின் முக்கிய அமைச்சர்களிடம் இருந்து அந்த கவுன்சிலர் கற்றுக் கொண்டாரா? என்று தெரியவில்லை. இதற்கு காரணம் அக்கட்சியின் தலைமையே, தேச விரோதமாக தான் இருக்கிறது. நாற்றுப் பற்று இன்றி ஒன்றிய அரசு என்று பேசிய போது அவர்கள் தேச விரோதிகள் என்று நான் தெரிவித்திருந்தேன்.
அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் தேச விரோத மனப்பான்மை ஊட்டி வளர்க்கப்படுகிறது. எனவே இதனை திராவிட முன்னேற்றக் கழகம் திருத்திக் கொள்ளாவிட்டால் "இந்த ஆட்சி இருக்காது" என்றார். முதலமைச்சர் ஸ்டாலின், கருணாநிதியை விட மோசமான நபர் என்றும், கருணாநிதி இது போன்ற தேச விரோத வேலைகளை செய்ய மாட்டார் என்றும் தெரிவித்தார்.
ஸ்டாலினின் கையில் நிர்வாகமும் இல்லை, கட்சியும் இல்லை, குடும்பமும் இல்லை அவர் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். இதன் விளைவு தான், ஒரு ராணுவ வீரரை கொலை செய்யும் அளவிற்கு திமுக காரர்களுக்கு தைரியம் வந்துள்ளது. இது போன்ற செயல்கள் தொடர்ந்தால் தேச பக்தர்களாகிய நாங்கள் திமுக காரர்களை வெளியில் நடமாட விடமாட்டோம் என்று தெரிவித்தார்.