"திருமாவளவன் ஒரு தீய சக்தி" - ஹெச்.ராஜா கடும் விமர்சனம்! பெரம்பலூர்: திண்டிவனத்தில் பாஜகவின் பட்ஜெட் சாதனை விளக்கக் கூட்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தேசிய செயலாளருமான ஹெச்.ராஜாவும், வேலூர் இப்ராஹிம் உள்ளிட்டோரும் கலந்து கொள்ள இருந்தனர்.
இதனிடையே, பாஜக மீது விசிக தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் விமர்சனம் செய்வதும், இதற்கு பதிலளிப்பதாக ஹெச்.ராஜா அவரை கடுமையாக விமர்சனம் செய்வதும் அண்மைக் காலங்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில், விசிக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சியினரும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டுக் கொண்ட சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன.
இத்தகைய நிலையில், பாஜகவினர் அறிவித்த பட்ஜெட் சாதனை விளக்க பொதுக்கூட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட விசிகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனவே, "திருமாவளவனை இழிவாக பேசிய ஹெச்.ராஜாவே திண்டிவனம் வராதே! திரும்பி செல்.. இல்லையேல், திருமா திசை நோக்கி.. மண்டியிட்டு மன்னிப்பு கேள்..!" என விசிகவினர் என்ற வசனத்துடன் வெளியிட்ட போஸ்டர் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.
அதே நேரத்தில், திண்டிவனத்தில் விசிக சார்பில் ஹெச்.ராஜாவிற்கு எதிராக கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் வாட்ஸ்அப்பில் செய்திகள் பரவியதாக கூறப்படுகிறது. இதனிடையே, "14.03.2023 அன்று ஹெச்.ராஜா பங்கேற்கும் பாஜக பொதுக்கூட்டம் திண்டிவனத்தில் நடக்க அனுமதிக்கக்கூடாது" என விசிகவின் வடக்கு மாவட்ட செயலாளர் சேரன், அம்மாவட்ட காவல் காண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவிடம் மனு அளித்திருந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் விசிக மற்றும் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலை உள்ளதாக கூறி, பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரியவருகிறது. இருப்பினும், பாதுகாப்புகாக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்ட இடம் உட்பட பல பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், பாஜவினரின் பட்ஜெட் சாதனை விளக்க பொதுக்கூட்டத்திற்கு வந்த ஹெச்.ராஜாவை, திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் தலைமையிலான கடலூர் மாவட்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, "விசிகவிற்கு பயந்து அச்சப்பட்டு என்னை கைது செய்வது முறையல்ல எனவும் இது திமுகவின் கையாலாகாத தனத்தை காட்டுவதாகவும் ஆவேசத்துடன் பேசியதோடு போலீசாருடன் வாக்குவாதத்திலும் அவர் ஈடுபட்டார். மேலும், திருமாவளவன் ஒரு தீய சக்தி என்றும் தேச துரோகி என்றும் டெல்லியிலிருந்து தென் மாவட்டங்களை கொளுத்துவேன் சொன்ன தீய சக்தி என்றும் சனாதனத்தை வேரறுப்போம் என்றும் அவர் கூட்டம் நடத்துவார்; ஆனால், அதற்கு இந்த சர்க்கார் அனுமதி கொடுக்குமா என்று கேள்வியெழுப்பியதோடு இந்து சமயத்தை இழிவாக பேசும் கீழ்த்தரமான ஒரு நபர் திருமாவளவன்' என்றும் அவர் கடுமையாக சாடினார்.
இதனையடுத்து ஹெச்.ராஜாவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் அப்பகுதியில் 2 மணி நேரமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:"தேசிய விருது இன்னும் கிடைக்கல ஆனால் ஆஸ்கர் வாங்கிட்டேன்" - பாடலாசிரியர் சந்திரபோஸ் சிறப்பு நேர்காணல்!