கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பொதுபோக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது. பொதுமக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்துவந்தனர்.
ஊரடங்கால் சிறு, குறு தொழிலாளர்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தனர். அன்றாட கூலியை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தும் பல தொழிலாளர்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்டுள்ளது, கரோனா ஊரடங்கு.
அம்மிக்கல் செய்யும் தொழிலாளி அந்த வகையில், அம்மிக்கல்லை தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலை நடத்தமுடியாமல், வறுமையின் பிடியில் இவர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமத்தில் மட்டும் 60க்கும் மேற்பட்ட கல்லுடைக்கும் தொழிலாளர்கள் குடிசை வீடுகளில் வசித்துவருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மிக்கல் தயாரிப்பு தொழிலில் இவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
அம்மிக்கல் தொழிலை புரட்டிப்போட்ட ஊரடங்கு ஏற்கனவே மிக்ஸி, கிரைண்டரின் வரவால் இவர்களின் தொழில் கடுமையாகப் பாதித்துள்ள நிலையில், அதனை ஊரடங்கு முற்றிலும் சிதைத்துள்ளதாக தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
குடிசையில் வசிக்கும் தங்களுக்கு நிரந்தர வீடு கட்டித்தர வேண்டும், வேலையில்லாமல் வருமானமின்றி இருக்கும் தங்களின் வாழ்வாதாரம் காத்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இவர்களின் தற்போதைய கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க:ஊரடங்கால் வேலையின்றித் தவிக்கும் பொற்கொல்லர்கள்