பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில் காணொலி காட்சிவாயிலாக இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலக கூட்ட அரங்கில் இருந்து காணொலி காட்சியில் வாயிலாக விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
அப்போது, பெரம்பலூர் மாவட்டத்தில் யூரியா உர தட்டுப்பாடு பிரச்னைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் போல, மக்காச்சோளம், பருத்தி அறுவடை காலங்களில், மக்காச்சோளம், பருத்தியை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். ஏரி குளத்தில் உள்ள வரத்து வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். துங்கபுரம் பகுதியில் மின் மாற்றி அமைத்து மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரம்பலூர் சர்க்கரை ஆலை மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகையினை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேப்பந்தட்டை பகுதியில், 60 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள, கனவு திட்டமான சின்ன முட்லூ அணைக்கட்டு திட்டத்தினை விரைந்து செயல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்தனர். மாவட்ட ஆட்சியர் விவசாயிகளின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.