தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிப்பி காளான் வளர்ப்பில் நல்ல லாபம் ஈட்டும் இளைஞர்! - perambalur district news

பெரம்பலூர்: சிப்பி காளான் வளர்ப்பில் நல்ல லாபம் ஈட்டும் இளைஞர் பற்றிய செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

சிப்பி காளான் வளர்ப்பில் நல்ல லாபம் ஈட்டும் இளைஞர்
சிப்பி காளான் வளர்ப்பில் நல்ல லாபம் ஈட்டும் இளைஞர்

By

Published : Oct 13, 2020, 7:10 PM IST

Updated : Oct 15, 2020, 4:22 PM IST

பெரம்பலூர் மாவட்டத்தை பொருத்தவரையில் பெருவாரியான மானாவாரி நிலங்கள் மழையை நம்பியே சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக மாவட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம், சிறு தானிய வகைகள் உள்ளிட்டவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

இதனிடையே பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் அருள் ஜோதி சிப்பி காளான் வளர்ப்பில் நல்ல லாபம் ஈட்டி வருகிறார்.

டிப்ளமோவில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்த இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனிடையே அவருக்கு தனியாக தொழில் செய்ய ஆர்வம் வந்துள்ளது.

எந்தத் தொழில் செய்யலாம் என நினைத்துக் கொண்டிருக்கும் போது, சகோதரன் ஆலோசனைப்படி தன்னுடைய வயலிலேயே காளான் பண்ணை அமைத்துள்ளார். தற்போது அதில் நல்ல லாபமும் ஈட்டி வருகிறார்.

சிப்பி காளான் வளர்ப்பில் நல்ல லாபம் ஈட்டும் இளைஞர்!

இது குறித்து இளைஞர் அருள்ஜோதி பேசுகையில், "எனக்கு இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது தற்போது நிறைவேறியுள்ளது. இரண்டு வகையான காளான் உள்ளது. ஒன்று பால் காளான், மற்றொன்று சிப்பி காளான்.

பருவநிலை மாற்றத்தால் சிப்பி காளான் வளர்த்து வருகிறேன். சென்ற மூன்று ஆண்டுகளாக பால் காளான் வளர்த்து வந்தேன். காளான் பற்றிய நன்மைகள் தற்போது பொதுமக்களுக்கு நன்றாக தெரிந்துள்ளது.

காளான் வளர்ப்பிற்காக நான் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்றுள்ளேன். பால், சிப்பி காளான் ஆகிய இரண்டுமே ஒரு கிலோ ரூ.200 முதல் 250 வரை விற்பனையாகிறது. சில்லறை விற்பனையாக பேக்கரி, உணவகங்கள் ஆகியவற்றில் காளான்களை விற்பனை செய்து வருகிறேன். மொத்தமாக காளான் விற்பனை மூலம் மாதம் ரூ. 25 ஆயிரம் வரை கிடைப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.

இவரின் சகோதரர் செல்வகுமார் தெரிவித்ததாவது, "நான் பிஎஸ்சி ஹேட்டல் மேனேஜ்மென்ட் படித்து வருகிறேன். தற்போது கரோனா ஊரடங்கால் சகோதரனுக்கு உதவியாக காளான் பண்ணையில் இருந்து வருகிறேன்.

சில நேரம் சாலையில் காளான்களை விற்பனை செய்வேன். நாங்கள் வளர்க்கும் காளான் நல்ல சுவையாக இருப்பதால் அதிகளவில் விற்பனையாகிறது" என்று தெரிவித்தார்.

மேலும் காளான் வாடிக்கையாளர் அருள்செல்வன் கூறுகையில், "பெரம்பலூர் மாவட்டத்திலேயே முதல் முறையாக இளைஞர்கள் காளான் பண்ணை வைத்துள்ளனர்.

இதனால் நேரடியாக அவர்களிடமே சென்று காளான்களை வாங்கி வருகிறேன். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் காளானை அனைவரும் வாங்குமாறு அறிவுறுத்தி வருகிறேன்" என்றார்.

இதையும் படிங்க:ஊரடங்கால் முடங்கியது காளான் விவசாயம்

Last Updated : Oct 15, 2020, 4:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details