தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கால் 'விலைபோகாத விநாயகர் சிலைகள்' சிறப்புத் தொகுப்பு! - விநாயகர் சிலை உற்பத்தியாளர்கள்

பெரம்பலூர்: கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக விநாயகர் சதுர்த்திக்காக தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனையாகாமல் முடங்கிக் கிடக்கின்றன. அதனால் விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அதுகுறித்த சிறப்பு செய்தி தொகுப்பு.

விலைபோகாத விநாயகர்
விலைபோகாத விநாயகர்

By

Published : Jul 31, 2020, 10:46 PM IST

இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் விழா விநாயகர் சதுர்த்தி விழா. ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி நாள் விநாயகர் சதுர்த்தி நாளாக கொண்டாப்படும். அந்நாளிலிருந்து பக்தர்கள் மூன்று முதல் பத்து நாள்கள் வரை விநாயகர் சிலையை வைத்து கொண்டாடுவார்கள். அதன் பின் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படும்.

அவ்வாறு கரைக்கப்படும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடுவார்கள். இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா ஊரடங்கில் கொண்டாடப்படுமா? எனும் கேள்வி எழுந்துள்ளது.

அரசு ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டித்து அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, கலாசார, சமய விழா ஊர்வலங்களுக்கு தடைவிதித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி வீட்டிலேயே கொண்டாடலாம் என அறிவுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்பட்ட சூழலில், சிலைத் தயாரிப்புக் கூட்டத்தின் உழைப்பு முற்றிலும் வீணாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் ஏராளமானோர், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை ஆலத்தூர் கேட் பகுதிகளில் ஊர்வல விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி 15 ஆண்டுகளாக அவர்கள் பெரம்பலூரில் 40 நாள்கள் தங்கி சிலை தயாரிக்கும் பணியை செய்துவருகின்றனர்.

ஆனால் இந்தாண்டு அவர்களுக்கு மிக நெருக்கடியை ஆண்டாக மாறியுள்ளது. இது குறித்து ஊர்வல விநாயகர் சிலை தயாரிப்புக் கூட உரிமையாளர் சிவக்குமார் கூறுகையில், "கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் காவனூர் கிராமத்திலிருந்து 15 ஆண்டுகளாக பெரம்பலூர் மாவட்டம் பேரளி, ஆலத்தூர் கேட், செட்டிகுளம் பகுதிகளில் ஊர்வல விநாயகர் சிலை தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகிறோம்.

இங்கு தயாரிக்கப்படும் சிலைகள் மரவள்ளிக்கிழங்கு மாவு அட்டை சிமெண்ட் பேப்பர் உள்ளிட்டப் பொருள்களால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை விநாயாகர் சிலைகள் நல்லமுறையில் விற்பனையாகி வந்தன. சொல்லப்போனால் கடந்தாண்டு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே விநாயகர் சிலைகளுக்கு ஆர்டர்கள் வந்தன. ஆனால் இந்தாண்டு தற்போதுவரை ஒரு ஆர்டர் கூட வரவில்லை.

வாடகை, மூலப் பொருள்கள் ஏற்றுக் கூலி, ஆள்கூலி, மின் கட்டணம், இதர செலவுகள் என ஊரடங்கில் கையில் வைத்திருந்த பணம் அனைத்தையும் முதலீடு செய்து விநாயாகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டேன். தற்போது ஆர்டர்கள் கிடைக்காமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிட்டது. அதனால் தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார்.

அதையடுத்து சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுவரும் தொழிலாளி பிரகாஷ் கூறுகையில், "கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலிருந்து இங்கு வந்து ஊர்வல விநாயகர் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்தாண்டு எதிர்பார்க்காத அளவிற்கு விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

'விலைபோகாத விநாயகர்' சிறப்புத் தொகுப்பு

தற்போது 400-க்கும் மேற்பட்ட சிலைகள் தயாரிக்கப்பட்டு வண்ணப்பூச்சுகளுக்காக தயார் நிலையில் உள்ளன. கடன் வாங்கி இப்பணிகளை உரிமையாளர்கள் செய்துவருகின்றனர். ஒரு ஆர்டர் கூட கிடைக்காத சூழ்நிலையில் வாங்கிய கடனையும் கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. எனவே அரசு இதற்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இப்படி சுமார் 30 குடும்பங்கள் சிலைத் தயாரிப்பு பணியை நம்பித்தான் உள்ளன. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பல லட்ச ரூபாய்க்கு சிலைகள் விற்பனையாவது வாடிக்கையாக இருந்து வந்த சூழலில் ஒரு சிலை கூட விற்பனையாகாதது அவர்களுக்கு பேரதிர்ச்சிதான். தாயாரிக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் கூடத்தில் முடங்கிபோய் உள்ளன. அவர்களின் வாழ்வாதாரம் காக்க அரசு என்ன செய்யப்போகிறது என்பது அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க:நெருங்குகிறது விநாயகர் சதுர்த்தி பண்டிகை- கலக்கத்தில் உற்பத்தியாளர்கள்

ABOUT THE AUTHOR

...view details